அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 

மலேசியாவில் ஹெச்ஏஎல் பிராந்திய அலுவலகம் திறப்பு

  • ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் (ஹெச்ஏல்) பிராந்திய அலுவலகத்தை, கோலாலம்பூரில் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
  • அந்த அலுவலகம், இந்தியா-மலேசியா இடையே பாதுகாப்பு தொழில் சார் கூட்டாண்மையை மேலும் நெருக்கமாகக் உதவும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முன்னதாக, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உள்பட அந்நாட்டின் உயர்நிலைத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
  • அப்போது, ராணுவம் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான கூட்டுறவை மேம்படுத்தும் வகையில் 1993-ஆம் ஆண்டைய ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ள இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும், தொழில் துறை ரீதியிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
  • மலேசியாவிலுள்ள பிரசித்து பெற்ற பத்து மலை முருகன் கோயிலில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வழிபாடு மேற்கொண்டார்.

மலேசியா பற்றி

  • பிரதமர் – அன்வர் இப்ராகிம்
  • தலைநகரம் – கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதி
  • நாணயம் – மலேசிய ரிங்கட்

சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள்

அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் கால நீட்டிப்பு சட்டவிரோதம் 

  • அமலாக்கத் துறையின் இயக்குநராக எஸ்.கே.மிஸ்ரா கடந்த 2018-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் 2020-ஆம் ஆண்டு நிறைவடைந்தது.
  • ஆனால், அவரின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு 2020-இல் நீட்டிக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டிலும் அவரது பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.
  • அதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
  • இதனிடையே, அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகளாக இருந்த நிலையில், அதை மேலும் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்மூலம் அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநர்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை பதவியில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டது.
  • அதனடிப்படையில், அமலாக்கத் துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக் காலமானது 3-ஆவது முறையாக கடந்த ஆண்டில் நீட்டிக்கப்பட்டது.
  • அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
  • மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளை மத்திய அரசு சீர்கெடுத்து வருவதாகவும் அவற்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
  • மனுவை கடந்த ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி), மத்திய அரசு, அமலாக்கத் துறை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
  • இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோரைக் கொண்ட அமர்வு வழங்கியது. அப்போது, அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் காலத்தை 3-ஆவது முறையாக நீட்டித்தது சட்டவிரோதமானது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
  • அதே வேளையில், அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக் காலத்தை அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க வகைசெய்த மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லுபடியாகும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அமலாக்கதுறை இயக்குநரகம் பற்றி

  • நிர்வாக இயக்குனர் – சஞ்சய் குமார் மிஸ்ரா
  • தலைமையகம் – புது தில்லி
  • அமைச்சகம் – நிதி (வருவாய் துறை)
  • நிறுவப்பட்டது – 1 மே 1956

வழிபாட்டுத் தலங்கள் சட்ட வழக்கு

  • கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில் எந்த மாற்றமும் இல்லாமல், அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வழிபாட்டுத் தலங்களை வேறு மதத்தின் வழிபாட்டுத் தலமாக மாற்ற அச்சட்டம் தடை விதிக்கிறது.
  • மேலும் அந்த வழிபாட்டுத் தலங்களை வேறு மதத்தின் வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவது தொடர்பாக எந்தவொரு நீதிமன்றத்திலும் புதிதாக வழக்கு தொடுக்கவும் அச்சட்டம் தடை விதித்துள்ளது.
  • இந்தச் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு எதிராக முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய உள்பட பலர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
  • இதில் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்துள்ள மனுவில், “உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஷாஹீ ஈத்கா மசூதி உள்ள இடங்களுக்கு ஹிந்துக்கள் உரிமை கோர வசதியாக, வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் சில பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும்“ என்று கோரியுள்ளார்.
  • அதேவேளையில், வழிபாட்டுத் தலங்கள் சட்டமே அரசியலமைப்புக்கு எதிரானது என்று அஸ்வினி உபாத்யாய மனு தாக்கல் செய்துள்ளார்.
  • இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பி.எஸ்.நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
  • நீதிபதிகள், மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க அக்டோபர் 31 வரை அவகாசரம் அளித்து வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.

பொது தேர்தலில் உள்ள சவால்கள்

வாக்கு ஒப்புகைச் சீட்டுக் கருவியில் புதிய அம்சம்

  • தேர்தலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில், வாக்கு ஒப்புகைச் சீட்டுக் கருவிகளில் (விவிபிஏடி) புதிய அம்சத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தப் புதிய அம்சம் மூலம், விவிபிஏடிகளின் முதல்கட்ட சோதனையின்போது, அந்தக் கருவிகளில் பதிவேற்றம் செய்யப்படும் வேட்பாளர்களின் பெயர், அவரின் சின்னம், வரிசை எண் ஆகியவற்றை தொலைக்காட்சி அல்லது கணினி திரைகளிலும் காணலாம். இது அந்த விவரங்களை சம்பந்தப்பட்டவர்கள் சரிபார்க்க உதவும்.
  • இந்த அம்சம் விவிபிஏடி கருவிகளில் கட்சி சின்னங்கள், வேட்பாளர்களின் பெயர்களை பதிவேற்றம் சின்னங்கள் உள்ளீட்டு பாகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்தலில் வாக்களிக்கும்போது வாக்குப்பதிவு இயந்திரத்தின் அருகில் உள்ள விவிபிஏடிகளில் தென்படும் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளில், எந்த வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டது என்பது தெரியும். இதன் மூலம், தான் வாக்களித்த வேட்பாளருக்குத்தான் வாக்கு பதிவானதா என்பதை வாக்காளரால் உறுதி செய்துகொள்ள முடியும்.

தேர்தல் ஆணையம் பற்றி

  • தலைமை தேர்தல் ஆணையர் – ராஜீவ் குமார்
  • தலைமையகம் – புது தில்லி
  • நிறுவப்பட்டது – 25 ஜனவரி 1950
  • குறிக்கோள் – அரசியலமைப்பு தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையம் இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகங்கள், நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் சட்டமன்றக் கவுன்சில்களுக்கான தேர்தல்களை நடத்துகிறது.

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 4,000 பேருந்துகளில் விழிப்புணர்வு

  • கடந்த 1987-இல் இருந்து ஆண்டுதோறும் ஜுலை 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியாகவும், தமிழகத்தின் மக்கள் தொகை 8.4 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
  • அதைத் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் பேருந்துகளில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. கருத்தடையின் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்படுகிறது.
  • பெண்கள் சிறுவயதில் திருமணம் செய்து கொள்வதற்கு தீர்வு காணும் வகையில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
Next அரசியல் அறிவியல் >

People also Read