Tag: தமிழகத்தின் மேலும் 3 பொருள்களுக்கு புவிசார் குறியீடு

தமிழ்நாடு

தமிழகத்தின் மேலும் 3 பொருள்களுக்கு புவிசார் குறியீடு திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் செடிபுட்டா  சேலை, திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என அறிவுசார் சொத்துரிமை வழக்குரைஞர் சங்கத் தலைவர் பி.சஞ்சய்காந்தி தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை தஞ்சாவூர் வீணை, கலைத்தட்டு, ஓவியம் உள்பட 55 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.  செடிபுட்டா சேலை: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வீரவநல்லுரில் செடிபுட்டா சேலை தயார் செய்யப்பட்டு வருகிறது.  இந்தக் கைத்தறி சேலையில் ஒரு செடியில் பூக்களும், இலைகளும் இருப்பது போல் புட்டா போட்டு நெய்யப்பட்டது. இதனால் நாளடைவில் செடிபுட்டா என்ற பெயர் பெற்றது.  பட்டு மற்றும் பருத்தி கலவை துணியில் இந்தச் சேலை தயார் செய்யப்பட்டு வருகிறது.  இந்தச் சேலை நெசவு குஜராத்தில் இருந்து தென் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குடியேறிய சௌராஷ்டிர சமூகத்தில் இருந்து உருவானது.  ஐடேரி நாமக்கட்டி:  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜடேரி கிராமத்தில் 300 ஆண்டுகளாக வாழ்வாதாரத்துக்காகச் கிராம மக்கள் நாமக்கட்டிகளை உருவாக்குவதில் ஈடுபட்டு வருகின்றனர்.  வெள்ளை களிமண் துண்டுகளாக நாமக்கட்டியைத் தயாரித்து வருகின்றனர்.  நாமக்கட்டிக்களைத் தயாரிப்பதற்கான வெள்ளை பூமி ஜடேரி கிராமத்துக்கு அருகிலுள்ள தென்பூண்டிப்பட்டில் கிடைக்கிறது.  விரல் வடிவில் உள்ள இந்த நாமக்கட்டிகள் மருத்துவ பயன்களைக் கொண்டுள்ளது. மட்டி வாழைப்பழம்:  கன்னியாகுமரி மாவட்டத்தில் அடிவார மலைகளுக்கு அருகில் மட்டி வாழைப்பழம் முக்கிய சாகுபடியாக உள்ளது.  இது முதலை விரல் வாழைப்பழம் எனவும் அழைக்கப்படுகிறது.  இதன் அறுவடைக் காலம் செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை இருக்கும்.  இந்த வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் ஆரோக்கியமான இதயத்தையும், ரத்த அழுத்தத்தையும் பராமரிக்க உதவுகிறது.