தமிழ்நாடு நிகழ்வுகள்

முன்முயற்சிகள்/திட்டம்

மின்-பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை (e-Zero FIR) அமைப்பு

  • பின்னணி: இணையவழி நிதி மோசடி வழக்குகளை விரைவாகப் பதிவு செய்யவும் விசாரிக்கவும் தமிழ்நாடு அரசு ‘மின்-பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை’ (e-Zero FIR) அமைப்பைச் செயல்படுத்தியுள்ளது.
  • 1930 என்ற தேசிய இணையக் குற்ற உதவி எண் மூலம் தெரிவிக்கப்படும், 1 லட்ச ரூபாய்க்கும் அதிகமான இழப்புடன் கூடிய இணைய மோசடி புகார்கள், மின்-பூஜ்ஜிய FIR-ஐப் பதிவு செய்வதற்காக ‘குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலைப்பின்னல் மற்றும் அமைப்புகளுடன்’ (CCTNS) தானாகவே இணைக்கப்படும்.

மின்-பூஜ்ஜிய FIR அமைப்பு பற்றி

  • இணையவழி நிதி மோசடி வழக்குகளை விரைவாகப் பதிவு செய்வதற்கும் விசாரிப்பதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு மின்னணு அமைப்பு.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) ஆதரவுடன் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்

  • 1 லட்சத்திற்கு அதிகமான இழப்புள்ள இணையவழி நிதி மோசடி புகார்களுக்கு இது பொருந்தும்.
  • 1930 தேசிய இணையக் குற்ற உதவி எண் மூலம் பெறப்படும் புகார்கள், மின்-பூஜ்ஜிய FIR-ஐப் பதிவு செய்ய CCTNS அமைப்புடன் தானாகவே ஒருங்கிணைக்கப்படுகின்றன.
  • பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 2023-இன் பிரிவு 173-ன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • எல்லை வரம்புகளைப்  பொருட்படுத்தாமல், பூஜ்ஜிய FIR-களை மின்னணு முறையில் பதிவு செய்ய இது உதவுகிறது.
  • மின்-பூஜ்ஜிய FIR ஆனது சம்பந்தப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்ட இணையக் குற்றக் காவல் நிலையத்திற்கு மின்னணு முறையில் மாற்றப்படுகிறது.
  • சரிபார்ப்புக்குப் பிறகு, இது வழக்கமான FIR-ஆக மாற்றப்படுகிறது.

நோக்கங்கள்

  • இணையக் குற்ற வழக்குகளை விரைவாகப் பதிவு செய்வதை உறுதி செய்தல்.
  • விரைவான விசாரணை மற்றும் ஒருங்கிணைப்பை எளிதாக்குதல்.
  • ‘கோல்டன் ஹவர்’  எனப்படும் முக்கியமான நேரத்தில் (இணைய மோசடி நடந்த உடனேயே உள்ள நேரம்; இச்சமயத்தில் விரைவான நடவடிக்கை எடுப்பது பணப் பரிமாற்றத்தைத் தடுக்கவும் பணத்தை மீட்டெடுக்கவும் அதிக வாய்ப்பை அளிக்கிறது) மோசடியான பரிவர்த்தனைகளை முடக்க வழிவகுத்தல்.
  • டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்தல்.
  • மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டெடுப்பதை மேம்படுத்துதல்.

முக்கியத்துவம்

  • அதிகார வரம்பு தொடர்பான சிக்கல்களால் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கிறது.
  • CCTNS-உடனான ஒருங்கிணைப்பு மூலம் இந்தியாவின் இணையக் குற்றத் தடுப்பு மற்றும் நடவடிக்கை திறனை வலுப்படுத்துகிறது.
  • 1930 இணையக் குற்ற உதவி எண், காவல்துறை மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது.
  • இணையவழி நிதி மோசடி வழக்குகளில் குடிமக்கள் சரியான நேரத்தில் சட்டரீதியான தீர்வுகளைப் பெறுவதை மேம்படுத்துகிறது.

 

வரலாறு மற்றும் பண்பாடு

தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம் – கரிவலம்வந்தநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகள்

  • பின்னணி: தென்காசி மாவட்டத்தில் உள்ள கரிவலம்வந்தநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், கற்காலம் முதல் சங்க காலம் வரை தொடர்ச்சியான மனிதக் குடியேற்றம் இருந்ததற்கான சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளன.
  • இந்த அகழ்வாராய்ச்சிப் பணியானது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரிவலம்வந்தநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகள் குறித்த தகவல்கள்

  • அகழ்வாராய்ச்சி தளத்தில் 18 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
  • கற்காலக் குடியேற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில் நுண்கற்கருவிகள்  கண்டறியப்பட்டுள்ளன.
  • நிலையான குடியேற்றத்தைக் குறிக்கும் வகையிலான செங்கல் கட்டுமானங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • மேம்பட்ட இரும்புத் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் இரும்பு உருக்குதல் தொடர்பான எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • சிறப்புத் தொழில்சார் செயல்பாடுகளை உணர்த்தும் வகையிலான கைவினைப் பொருட்கள் தயாரிப்புப் பட்டறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • சங்க காலத்தில் இத்தளம் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, இரும்புத் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் முக்கிய மையமாகத் திகழ்ந்ததை இக்கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

முக்கியத்துவம்

  • பல்வேறு வரலாற்றுக்கால கட்டங்களில் தொடர்ச்சியான கலாச்சார மற்றும் மனிதக் குடியேற்றம் இருந்ததை இது வெளிப்படுத்துகிறது.
  • கற்காலச் சமூகங்களிலிருந்து நகரமயமாக்கப்பட்ட சங்க கால நாகரிகம் வரையிலான பரிணாம வளர்ச்சிக்கான மதிப்புமிக்க சான்றுகளை இது வழங்குகிறது.
  • பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நிலவிய இரும்புத் தொழில்நுட்பம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட கைவினைத் தொழில்களின் வளர்ச்சியை இது எடுத்துக்காட்டுகிறது.
  • சங்க கால வர்த்தக வலைப்பின்னல்கள் மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகள் குறித்த புரிதலை இது வலுப்படுத்துகிறது.
  • கீழடி அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளுக்குத் துணையாக அமையும் வகையில், தமிழ்நாட்டின் பரந்த தொல்லியல் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இது திகழ்கிறது.

 

பொருளாதாரம்

சமக்ர சிக்ஷா  திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பான சிக்கல்

  • பின்னணி: தமிழ்நாடு அரசுக்கு ‘சமக்ர சிக்ஷா’ திட்ட நிதியை விடுவிப்பது, தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020-ஐச் செயல்படுத்துவதுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
  • இருப்பினும், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் வரும் ‘கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் வழங்கப்பட வேண்டிய உரிமைகள்/பலன்கள்’ தொடர்பான நிதி மட்டும் தனியாக விடுவிக்கப்படும் என்று அது தெளிவுபடுத்தியுள்ளது.

 

சமக்ர சிக்ஷா திட்டம் பற்றி

  • பள்ளிப் கல்விக்கான மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டம்; இது பின்வருவனவற்றை உள்ளடக்கியது:
  • தொடக்கக் கல்வி
  • இடைநிலைக் கல்வி
  • ஆசிரியர் கல்வி
  • இது முந்தைய திட்டங்களை ஒருங்கிணைக்கிறது:
  • சர்வ சிக்ஷா அபியான் (SSA)
  • ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் (RMSA)
  • ஆசிரியர் கல்வி (TE)

நிதி ஏன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

  • சமக்ர சிக்ஷா திட்டத்தைச் செயல்படுத்துவது, NEP 2020-ஐச் செயல்படுத்துவதுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
  • ‘பிஎம் ஸ்கூல்ஸ் ஃபார் ரைசிங் இந்தியா’ (PM-SHRI) திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) தமிழ்நாடு இன்னும் கையெழுத்திடவில்லை என்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது.
  • மாநில அரசு NEP-ஐ முழுமையாகச் செயல்படுத்தவில்லை என்பதையே இது காட்டுவதாக மத்திய அரசு கருதுகிறது.

தமிழ்நாட்டின் நிலைப்பாடு

  • தமிழ்நாடு அரசு பின்வருவனவற்றைச் செய்ய மறுத்துவிட்டது:
  • NEP 2020-ன் கீழ் உள்ள மும்மொழித் திட்டத்தைச்  செயல்படுத்துதல்.
  • PM-SHRI புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல்.
  • மாநில அரசு தனது நீண்டகால இருமொழித் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) கொள்கையையே தொடர்ந்து கடைப்பிடிக்கிறது.

RTE (உரிமைகள்/பலன்கள்) கூறு

  • RTE (உரிமைகள்/பலன்கள்) தொடர்பான நிதித் தொகை தனியாக விடுவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • RTE-ன் கீழ் 2026–27-க்கான ஒதுக்கீடு: 624.19 கோடி
  • மத்திய அரசின் பங்கு: 374.51 கோடி
  • 2025-ல், உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, RTE பிரிவின் கீழ் மத்திய அரசு 538.39 கோடியை விடுவித்தது.

முக்கியத்துவம்

  • கல்விக்கான நிதியை NEP 2020-ஐச் செயல்படுத்துவதுடன் இணைப்பது குறித்த மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான விவாதத்தை இது முன்னிலைப்படுத்துகிறது.
  • கூட்டுறவு கூட்டாட்சி , கல்விக் கொள்கை மற்றும் நிதிசார் உறவுகள் தொடர்பான சிக்கல்களை இது எழுப்புகிறது.
  • மொழி மற்றும் பள்ளிச் சீர்திருத்தங்கள் குறித்த மாறுபட்ட அணுகுமுறைகளை இது பிரதிபலிக்கிறது.

 

சுற்றுச்சூழல்

மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டம்

  • பின்னணி: சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) உள்ள நெம்மேலியில், தமிழ்நாடு நீர்வளத் துறையால் செயல்படுத்தப்படும் 342 கோடி மதிப்பிலான திட்டம் இதுவாகும்.

மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டம் – பற்றி

  • கடலில் கலப்பதற்கு முன்பாகவே உபரி மழைநீரைச் சேகரித்து வைப்பதன் மூலம் சென்னையின் குடிநீர் சேமிப்புத் திறனை அதிகரிப்பதையும், வறட்சிக் காலங்களில் நீர் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • இது சென்னையின் நீண்டகாலக் குடிநீர் விநியோகத்தை வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • வழக்கமாகக் கடலில் கலந்து வீணாகும் பருவமழைக்கால உபரி நீரைச் சேமிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வறட்சிக் காலங்களில் நீரின் இருப்பை மேம்படுத்தவும், தொலைதூர நீர் ஆதாரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மாநிலத்தின் விரிவான நகர்ப்புற நீர் வள மேலாண்மை மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் சார்ந்த உத்திகளின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமைகிறது.

எழுப்பப்பட்டுள்ள கவலைகள்

  • கடலோர நீர் ஓட்டம் மற்றும் மீன் இனப்பெருக்க வாழ்விடங்களை மாற்றுவதன் மூலம் இத்திட்டம் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடும் என்று உள்ளூர் மீனவர்கள் வாதிடுகின்றனர்.
  • பல்லுயிர் வளம், சதுப்பு நிலங்கள், வலசை வரும் பறவைகள் மற்றும் இயற்கையான நீர் வெளியேற்றப் பாதைகள் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்துச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்; இத்தகைய மாற்றங்கள் வெள்ள அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
  • சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியான தாக்கங்கள் முழுமையாக மதிப்பிடப்படவில்லை என்று இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் வாதிடுவதுடன், இத்திட்டம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

 

Next தமிழ்நாடு நிகழ்வுகள் >