இந்திய சூழலியல் ஆர்வலர்களுக்கு விருது ஆஸ்கர் விருது பெற்ற “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” ஆவண குறும்படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வஸ் உள்பட இந்திய சூழலியல் ஆர்வலர்களுக்கு பிரிட்டன் அரசர் சார்லஸ், அரசி கமீலா ஆகியோர் சுற்றுச்சூழல் விருது வழங்கி கௌரவித்தினர். பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எலிஃபன்ட் ஃபேமிலி என்ற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் முதுமலை வனப்பகுதியில், தாயைப் பிரிந்த யானைக் குட்டிகளைப் பராமரிக்கும் பழங்குடியின் தம்பதியின் வாழ்க்கையையும், யானைக் குட்டிகள் மற்றும் தம்பதிக்கு இடையிலான உறவையும் உயர்வுபூர்வமாக பதிவு செய்திருந்த ”தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றது. ஆவண குறும்பட பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியப் படைப்பு இதுவாகும். கார்த்திகிக்கு ”தாரா” விருதும், நீலகிரியில் செயல்படும் தி ரியல் எலிஃபன்ட் கலெக்டிவ் (டிஆர்இசி) எனும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த 70 பழங்குடியின கைவினைக் கலைஞர்களுக்கு ”மார்க் ஷண்ட்” விருதும் வழங்கப்பட்டது. ஆசிய யானைகளை அழிவிலிருந்து காப்பதை நோக்கமாக கொண்ட எலிஃபன்ட் ஃபேமிலி தன்னார்வ நிறுவனத்தின் நிறுவனர், மார்க் ஷண்ட் பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது.

