உலகப் பொருளாதாரத் தரவரிசையில் இந்தியாவின் நிலை பின்னணி: சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) வெளியிடப்பட்ட முக்கியப் பொருளாதாரங்களின் தரவரிசையில், இந்தியா தனது 5-வது இடத்திலிருந்து 6-வது இடத்திற்குப் பின்தங்கியுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) அடிப்படை ஆண்டை 2011-12-லிருந்து 2022-23-க்கு மாற்றியமைத்ததன் காரணமாகவே, இந்தியா ஒரு இடம் பின்தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. IMF தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 3.76 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவின் GDP மதிப்பு 3.92 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், ஐக்கிய இராச்சியத்தின் (United Kingdom) GDP மதிப்பு 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 2024-இல் 84.57-லிருந்து 2025-இல் 88.48-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த ஆண்டில் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்து, 92.59-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாறாக, அமெரிக்க டாலருக்கு எதிரான பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு வலுவடைந்து வருகிறது. IMF தரவுகளின் அடிப்படையில், தற்போதைய நாணய மாற்று விகிதங்களைக் கணக்கில் கொண்டால், இந்த ஆண்டில் முக்கியப் பொருளாதாரங்களின் தரவரிசையில் இந்தியா தனது 6-வது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது. எனினும், வரும் ஆண்டில் இந்தியா ஐக்கிய இராச்சியத்தை மட்டுமல்லாமல், ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போக்கு தொடருமானால், 2031-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவானது ஜெர்மனியை முந்தி, 3வது இடத்திற்கு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. முதல் 5 நாடுகள்: அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய இராச்சியம்.

