உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் பின்னணி: உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக நியமிக்கபடும் நீதிபதியை இரு மாதங்களுக்கு முன்பாகவே அங்கு பணியிட மாற்றும் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் முடிவெடுத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, மார்ச் 5-ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார். புதிய தலைமை நீதிபதி ஆக சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரி (மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்) நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள நீதிபதி இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அந்த உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார். இதனால் அங்கு காலிப் பணியிடம் ஏற்படுவதற்கு முன்னதாகவே அவர் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தின் சூழல் மற்றும் நிலவரத்தை அறிந்து சிறப்பாகப் பணியாற்றமுடியும். நீதித்துறை நிர்வாகம் மற்றும் தரத்தை வலுப்படுத்த இந்தக் கொள்கை முடிவை உச்சநீதிமன்ற கொலிஜியம் மேற்கொண்டுள்ளது. கொலீஜியம் இரண்டாவது நீதிபதிகள் வழக்கு (1993), இந்தியாவில் நீதித்துறை நியமனங்களுக்கான கொலீஜியம் அமைப்பை நிறுவியது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமித்தல் மற்றும் இடமாற்றம் செய்வதற்கான ஒரு அமைப்பே கொலீஜியம் அமைப்பு ஆகும். உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 217: உயர் நீதிமன்ற நீதிபதியை இந்தியத் தலைமை நீதிபதி (CJI) மற்றும் மாநில ஆளுநருடன் கலந்தாலோசித்து குடியரசுத் தலைவர் நியமிக்கின்றார். தலைமை நீதிபதி அல்லாத வேறு நீதிபதியை நியமிக்கும் போது, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசிக்கப்படுகிறது.

