தேசிய செய்திகள்

White Rabbit (WR) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியச் சீர்நேர (IST) விநியோக வலையமைப்பு

  • பின்னணி: White Rabbit (WR) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியச் சீர்நேர (IST) விநியோகச் செயல்விளக்க வலையமைப்பு, பெங்களூருவின் ஜக்கூரில் உள்ள மண்டலக் குறிப்புத் தரநிலைகள் ஆய்வகத்தில்  தொடங்கப்பட்டது.
  • இது “ஒரே நாடு, ஒரே நேரம்” என்ற முன்னெடுப்பின் ஒரு பகுதியாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

நோக்கம்

  • பாதுகாப்பான மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு தேசிய நேர அமைப்பை உருவாக்குதல்.
  • துல்லியமான நேரத்தைப் பெறுவதற்கு GPS போன்ற வெளிநாட்டு அமைப்புகளைச் சார்ந்திருப்பதை குறைத்து, நாடு முழுவதும் நம்பகமான நேர ஒத்திசைவை  உறுதி செய்தல்.

முதன்மைக் அமைச்சகம்

  • இத்திட்டம் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்ட அளவியல் பிரிவால்  நிர்வகிக்கப்படுகிறது.

White Rabbit (WR) தொழில்நுட்பம் பற்றி

  • White Rabbit (WR) என்பது ஈதர்நெட்  வலையமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு திறந்த-மூல தொழில்நுட்பமாகும்.
  • இது சப்-நானோசெகண்ட்  துல்லியம் மற்றும் பிகோசெகண்ட்  அளவிலான நுட்பமான துல்லியத்துடன் கூடிய நேர ஒத்திசைவை வழங்குகிறது.
  • இது பெரிய அளவிலான வலையமைப்புகளில் அதிவேக (கிகாபிட்) தரவுப் பரிமாற்றத்தையும் ஆதரிக்கிறது.

ஒரே நாடு, ஒரே நேரம்” பற்றி

  • “ஒரே நாடு, ஒரே நேரம்” என்பது நாடு முழுமைக்கும் துல்லியமான மற்றும் பொதுவான ஒரு நேர அமைப்பை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முன்னெடுப்பாகும்.
  • இது அரசு அலுவலகங்கள், தொழில்துறைகள், தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு ஒரே மாதிரியான துல்லியமான நேரத்தை வழங்கும்.
  • மைக்ரோசெகண்ட்  அளவிலான துல்லியத்துடன் நேரத்தை விநியோகிக்க, இந்தியா முழுவதும் ஐந்து சட்ட அளவியல் ஆய்வகங்களை அரசாங்கம் நிறுவும்.

சுயசார்பு நேரக் கண்காணிப்பு அமைப்பின் தேவை

  • துல்லியமான நேரத்தைப் பெறுவதற்கு இந்தியா தற்போது அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்படும் GPS அமைப்பைச் சார்ந்திருக்கிறது.
  • இந்தச் சார்புநிலை தேசியப் பாதுகாப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான அபாயங்களை உருவாக்கக்கூடும்.
  • கார்கில் போரின்போது (1999), துல்லியமான GPS தரவைப் பெறுவதில் இந்தியா சிக்கல்களை எதிர்கொண்டது; இது ராணுவ நடவடிக்கைகளைப் பாதித்தது.
  • உள்நாட்டு நேரக் கண்காணிப்பு அமைப்பு வெளிநாட்டுச் சார்பைக் குறைப்பதோடு, முக்கியமான உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பையும் மேம்படுத்தும்.

செயல்முறை

  • தேசிய இயற்பியல் ஆய்வகம் (NPL) உயர்-துல்லிய அணுக்கடிகாரங்களைப் பயன்படுத்தி இந்தியாவின் அதிகாரப்பூர்வ நேரத்தைப் பராமரிக்கும்.
  • இந்த அணுக்கடிகாரங்கள் மிகவும் துல்லியமானவை; இவை பல மில்லியன் ஆண்டுகளில் ஒரு வினாடி மட்டுமே மாறுபடும்.
  • அதிகாரப்பூர்வ நேரம் NavIC (Navigation with Indian Constellation) மூலம் நாடு முழுவதும் பகிரப்படும்.
  • அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்கள், அனைத்து அமைப்புகளையும் ஒத்திசைவாக வைத்திருக்க (NTP) மற்றும் (PTP) ஆகியவற்றைப் பயன்படுத்தும்.

 நன்மைகள்

  • 5G, செயற்கை நுண்ணறிவு (AI), பொருட்களின் இணையம் (IoT), வழிசெலுத்தல் மற்றும் மின்-கட்டமைப்பு மேலாண்மை போன்ற முக்கியத் துறைகளில் துல்லியத்தன்மையை மேம்படுத்துகிறது.
  • நிதிப் பரிவர்த்தனைகளை மிகவும் துல்லியமாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவதுடன், மோசடி அபாயத்தையும் குறைக்கிறது.
  • டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு வலைப்பின்னல்களை ஒருங்கிணைப்பதன் மூலம், சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட பொதுச் சேவைகளுக்கு வழிவகுக்கிறது.
  • இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, உலகளாவிய தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்ப்பதில் நாட்டை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றுகிறது.
  • விமானம் போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் பிற உலகளாவிய தொழில்துறைகளில் பின்பற்றப்படும் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப இந்தியாவின் நேரத்தைக் கணக்கிடும் முறையை மாற்றியமைக்கிறது.

 

இந்திய மின்னணு வர்த்தகக் குழு (ECCI)

  • பின்னணி: ‘இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ (IAMAI) அமைப்பு, ‘இந்திய மின்னணு வர்த்தகக் குழு’வை (ECCI) தொடங்கியுள்ளது.
  • இந்தியாவின் 120 பில்லியன் டாலர் மதிப்புள்ள டிஜிட்டல் வர்த்தகத் துறையை ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட முதல் தேசிய தளம் இதுவாகும்.

இந்திய மின்னணு வர்த்தகக் குழு (ECCI) பற்றிய விவரங்கள்

  • டிஜிட்டல் வர்த்தகச் சூழல் அமைப்பின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் இந்தியாவின் முதல் தேசிய தளம் ECCI ஆகும்.
  • இது அரசு, தொழில் துறை மற்றும் பிற பங்குதாரர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது.
  • இது ‘இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ (IAMAI) அமைப்பால் தொடங்கப்பட்டது.

உறுப்பினர்கள்

  • கொள்கை வகுப்பாளர்கள், மின்னணு வர்த்தகச் சந்தை தளங்கள், பிராண்டுகள், சில்லறை விற்பனையாளர்கள், சரக்கு போக்குவரத்து (Logistics) நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள், ஸ்டார்ட்அப்கள், ஏற்றுமதியாளர்கள், MSME-க்கள் (நுண்ணிய, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்), துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்.

முக்கியக் கவனம் செலுத்தும் பகுதிகள்

  • இக்குழு பின்வரும் பணிகளில் ஈடுபடும்: கொள்கை சார்ந்த பரிந்துரைகள் (சிறந்த அரசு கொள்கைகளை முன்மொழிதல்), ஆராய்ச்சி, மற்றும் தொழில் துறை ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாடு.
  • இது பின்வரும் துறைகளில் கவனம் செலுத்தும்: பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான மின்னணு வர்த்தகம், எல்லை தாண்டிய வர்த்தகம், சரக்கு போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலி, இயக்கம் , பயணத் தொழில்நுட்பம்  MSME மேம்பாடு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள், நுகர்வோர் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு, மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI).

 

‘இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ (IAMAI) பற்றிய விவரங்கள்

  • IAMAI 2004-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இது ‘சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860’-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட, லாப நோக்கற்ற தொழில் துறை சார்ந்த அமைப்பாகும்.
  • டிஜிட்டல் சேவைகள் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் ஒரே அமைப்பு இதுவாகும்.
  • இதில் இந்திய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

நோக்கங்கள்

  • இந்தியாவில் இணையம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தல்.
  • அரசு, முதலீட்டாளர்கள், நுகர்வோர் மற்றும் பிற பங்குதாரர்களிடம் டிஜிட்டல் வணிகங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துதல்.
  • சுதந்திரமான மற்றும் நியாயமான போட்டியை ஆதரித்தல்; அத்துடன் வணிகம் மற்றும் நுகர்வோர்-நட்புச் சட்டங்களை ஊக்குவித்தல். IAMAI பிரதிநிதித்துவப்படுத்தும் துறைகள்
  •  டிஜிட்டல் விளம்பரம், டிஜிட்டல் பொழுதுபோக்கு, பயணத் தொழில்நுட்பம் , ஆன்லைன் கேமிங், டிஜிட்டல் பணம் செலுத்துதல், FinTech, டிஜிட்டல் வர்த்தகம், , பிக் டேட்டா, இயந்திரக் கற்றல் , செயற்கை நுண்ணறிவு , பொருட்களின் இணையம் (IoT), ஆக்மென்டட் ரியாலிட்டி  மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி , தளவாடத் தொழில்நுட்பம் 

முக்கிய செயல்பாடுகள்

  • பொதுக் கொள்கை மற்றும் பரிந்துரை
  • வணிக நிறுவனங்களுக்கான (B2B) மாநாடுகள்
  •  ஆராய்ச்சி
  • புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல்
  • நுகர்வோர் நம்பிக்கை மற்றும் ஆன்லைன் பாதுகாப்பை உருவாக்குதல்.

 

அணைப் பாதுகாப்புக்கான தேசியக் குழு (NCDS)

  • பின்னணி: நாடு முழுவதும் அணைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அமலாக்கத்தை ஆய்வு செய்வதற்காக, அணைப் பாதுகாப்புக்கான தேசியக் குழுவின் (NCDS) 12-வது கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

அணைப் பாதுகாப்புக்கான தேசியக் குழு (NCDS) பற்றி

  • இந்தியாவில் அணைப் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை வகுக்கும் மிக உயர்ந்த அமைப்பு இதுவாகும்.
  • நாடு முழுவதும் உள்ள பெரிய அணைகளுக்கான சீரான பாதுகாப்புத் தரநிலைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை இது உருவாக்குகிறது.
  • சட்டப்பூர்வ நிலை
  • இது ‘அணைப் பாதுகாப்புச் சட்டம், 2021’-ன் பிரிவு 5-ன் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • முன்னதாக, இது 1987-ல் ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் உருவாக்கப்பட்டது.
    • முக்கிய அமைச்சகம்: இது ‘ஜல் சக்தி’ அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
    • தலைமையகம்: இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
    • பதவிக்காலம்: இக்குழு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை மறுசீரமைக்கப்படுகிறது.
  • தலைவர்
  • மத்திய நீர் ஆணையத்தின் (CWC) தலைவர் இக்குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.
  • அமைப்பு
  • மத்திய அரசின் பிரதிநிதிகள்
  • மாநில அணைப் பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள்
  • அணைப் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான துறைகளில் உள்ள நிபுணர்கள்

NCDSன் செயல்பாடுகள்

  • கொள்கை உருவாக்கம்: அணைகளுக்கான தேசியக் கொள்கைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை வகுக்கிறது.
  • பாதுகாப்புத் தரநிலைகளை நிர்ணயித்தல்: இந்தியா முழுவதும் உள்ள குறிப்பிட்ட அணைகளுக்குச் சீரான பாதுகாப்புத் தரநிலைகளை வகுத்து அளிக்கிறது.
  • பேரிடர் தடுப்பு: பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் எதிர்கால அபாயங்களைக் குறைக்கவும் அணைச் செயலிழப்புகள் மற்றும் விபத்துகள் குறித்து ஆய்வு செய்கிறது.
  • மாநிலங்களுடனான ஒருங்கிணைப்பு: அணைப் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்ப்பதிலும், பல்வேறு மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதிலும் உதவுகிறது.

அவசரகாலத் தயார்நிலை

  • அவசரகாலச் செயல் திட்டங்களை (EAPs) தயாரிப்பதையும் செயல்படுத்துவதையும் ஊக்குவிக்கிறது.
  • அணை தொடர்பான அவசரநிலைகளின் போது மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கிறது.

ஆலோசனைப் பங்கு

  • இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள திட்டங்கள் தொடர்பான அணைப் பாதுகாப்பு விவகாரங்களில் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குகிறது.

வந்தே மாதரம் குறித்த உள்துறை அமைச்சகத்தின் புதிய நெறிமுறை

  • பின்னணி: தேசியப் பாடலின் அனைத்து ஆறு சரணங்களையும் பாட வேண்டும் என்றும், தேசிய கீதத்துடன் இணைந்து இசைக்கப்படும்போது, ​​தேசிய கீதத்திற்கு முன்னதாக ‘வந்தே மாதரம்’ பாடப்பட வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • தேசியப் பாடல் இயற்றப்பட்டதன் 150-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையிலும், அதன் வரலாற்று மற்றும் தேசபக்தி முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் வகையிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘வந்தே மாதரம்’ பற்றி:

  • ‘வந்தே மாதரம்’ என்பது இந்தியாவின் தேசியப் பாடலாகும். பங்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்ட இப்பாடல், நாட்டைத் தாயாகப் போற்றுவதுடன், தேசபக்தி மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகவும் திகழ்கிறது.
  • இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது இப்பாடல் முக்கிய பங்காற்றியது; இன்றும் இது தேசியப் பெருமை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.
  • இயற்றப்பட்ட ஆண்டு: 1870-களில் இயற்றப்பட்டு, பின்னர் 1882-ல் ‘ஆனந்தமடம்’ நாவலில் வெளியிடப்பட்டது.
  • தேசியப் பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு: 1950-ஆம் ஆண்டு ஜனவரி 24-அன்று அரசியலமைப்புச் சபையால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • மொழி: முதலில் சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழிகளில் எழுதப்பட்டது.
  • மொத்த சரணங்கள்: முழுப் பாடலும் ஆறு சரணங்களைக் கொண்டுள்ளது.
  • கருப்பொருள் மற்றும் பொருள்: இப்பாடல் இந்தியாவை ஒரு தெய்வீகத் தாயாகப் போற்றுகிறது; மேலும் நாட்டின் இயற்கை அழகு, வலிமை மற்றும் கலாச்சாரச் செழுமை ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறது.
  • விடுதலை இயக்கத்தில் பங்கு: பிரிட்டிஷ் ஆட்சியின் போது, ​​இது ஒரு தேசபக்தி முழக்கமாகத் திகழ்ந்ததுடன், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமைந்தது.
  • கலாச்சார முக்கியத்துவம்: ‘வந்தே மாதரம்’ தேசிய ஒற்றுமை, தேசபக்தி மற்றும் தாய்நாட்டின் மீதான மரியாதை ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது.
  • அதிகாரப்பூர்வ அங்கீகாரம்: இது தேசியப் பாடலுக்கான அந்தஸ்தைக் கொண்டுள்ளது; அதேவேளையில் ‘ஜன கண மன’ தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • நவீன காலப் பயன்பாடு: அரசு விழாக்கள், கலாச்சார நிகழ்வுகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தேசபக்தி சார்ந்த நிகழ்ச்சிகளில் இப்பாடல் பாடப்படுகிறது.

 

யூரியாவிற்கான தேசிய முதலீட்டுக் கொள்கை (NIPU-2026)

  • பின்னணி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA), யூரியாவுக்கான தேசிய முதலீட்டுக் கொள்கை-2026-க்கு (NIPU-2026) ஒப்புதல் அளித்துள்ளது.
  • யூரியாவைப் பயன்படுத்துவதில் இந்தியா உலகில் இரண்டாவது பெரிய நாடாகத் திகழ்கிறது; உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய அது தொடர்ந்து இறக்குமதியையே பெரிதும் நம்பியுள்ளது.
  • உலகளவில் உரங்களின் விலை உயர்வு மற்றும் விநியோகத் தடைகள் ஆகியவை, யூரியா உற்பத்தியில் தன்னிறைவு (ஆத்மநிர்பார் பாரத்) பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளன.
  • உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தவும், எரிசக்தித் திறனை மேம்படுத்தவும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் அரசு ஒரு புதிய முதலீட்டுச் கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

யூரியாவிற்கான தேசிய முதலீட்டுக் கொள்கை-2026 (NIPU-2026) பற்றிய விவரங்கள்

  • NIPU-2026 என்பது இந்தியாவில் நவீன இயற்கை எரிவாயு அடிப்படையிலான யூரியா ஆலைகளை ஊக்குவிப்பதற்கான ஒரு புதிய முதலீட்டுக் கொள்கையாகும்.
  • இது, அக்டோபர் 2019-ல் முதலீட்டுக் காலம் முடிவடைந்த ‘புதிய முதலீட்டுக் கொள்கை (NIP)-2012’-க்கு மாற்றாக அமைகிறது.

நோக்கங்கள்

  • 10 மில்லியன் டன் அளவிலான புதிய உள்நாட்டு யூரியா உற்பத்தித் திறனைச் சேர்த்தல்.
  • இயற்கை எரிவாயு அடிப்படையிலான 8 முதல் 9 யூரியா ஆலைகளை நிறுவுவதற்கு ஆதரவளித்தல்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • குறிக்கோள் சார்ந்த உற்பத்தித் திறன் விரிவாக்கம்: 10 மில்லியன் டன் உள்நாட்டு யூரியாவை உற்பத்தி செய்ய 8 முதல் 9 புதிய ஆலைகளை உருவாக்குதல்.
  • நிலையான மற்றும் மாறுபடும் செலவுகள் தனித்தனியாகப் பிரித்தல்: அதிக வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய, மானியக் கணக்கீடுகளில் நிலையான மற்றும் மாறுபடும் செலவுகள் தனித்தனியாகப் பிரிக்கப்படும்.
  • பங்கு மூலதனத்தின் மீதான உறுதியான வருவாய் (RoE): தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் 12% முதல் 16% வரையிலான RoE-க்கு உத்தரவாதம் அளிக்கிறது.
  • அந்நியச் செலாவணி இடர் பாதுகாப்பு: நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிலையான செலவுகளை முழுமையாக இந்திய ரூபாயாக (INR) மாற்றிக்கொள்ளலாம்; இது நாணய மதிப்பு மாற்றத்தால் ஏற்படும் இடரைக் குறைக்கிறது.
  • ஆலை அளவிலான நிதிச் சேமிப்பு: NIP-2012 கொள்கையுடன் ஒப்பிடுகையில், ஒரு ஆலைக்கு 250 கோடிக்கும் அதிகமான சேமிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஒற்றைச் சாளர முறை மூலம் முன்மொழிவுகளுக்கு ஒப்புதல்: நிலுவையில் உள்ள உர ஆலை முன்மொழிவுகளை மதிப்பீடு செய்ய ஒருங்கிணைந்த வழிமுறையை வழங்குகிறது.

முக்கியத்துவம்:

  • NIPU-2026 கொள்கையானது, இந்தியாவின் சுமார் 10 மில்லியன் டன் யூரியா பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், இறக்குமதியைக் குறைக்கவும், நாட்டைத் தன்னிறைவை நோக்கி நகர்த்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தெளிவான செலவு விதிமுறைகள் மற்றும் 12–16% வரையிலான உறுதியான RoE ஆகியவை முதலீட்டு இடர்களைக் குறைக்கின்றன; இதன் மூலம் நவீன எரிவாயு அடிப்படையிலான யூரியா ஆலைகளில் பொது மற்றும் தனியார் துறை முதலீடுகள் அதிகரிக்க ஊக்குவிக்கப்படுகின்றன.

 

உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026

  • சூழல்: இந்தியத் தலைமை நீதிபதி உட்பட உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயர்த்துவதற்கான ‘உச்ச நீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026’-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2019-ல் மேற்கொள்ளப்பட்ட கடைசி மாற்றத்திற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், ‘உச்ச நீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) சட்டம், 1956’-ல் திருத்தம் செய்வதன் மூலம் இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும்.
  • 92,385 வழக்குகள் தேங்கியுள்ள சூழல் மற்றும் பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் மின்னணு முறையில் வழக்குத் தாக்கல் (e-filings) அதிகரித்ததால் ஏற்பட்ட கூடுதல் பணிச்சுமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

உச்ச நீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026 பற்றிய விவரங்கள்:

  • அரசியலமைப்புச் சார்ந்த அடிப்படை: இந்திய அரசியலமைப்பின் 124(1)-வது பிரிவின்படி, உச்ச நீதிமன்றத்தில் ஆரம்பத்தில் ஒரு தலைமை நீதிபதியும் 7 பிற நீதிபதிகளும் மட்டுமே இருந்தனர். இருப்பினும், சட்டத்தின் மூலம் இந்த எண்ணிக்கையை உயர்த்துவதற்கான அதிகாரத்தை அரசியலமைப்பு நாடாளுமன்றத்திற்குத் தெளிவாக வழங்கியுள்ளது.
  • பணிச்சுமையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிர்வாக உத்தரவுகள் மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக்கூடிய உயர் நீதிமன்றங்களைப் போலன்றி, உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை நாடாளுமன்றச் சட்டத்தின் மூலமாக மட்டுமே மாற்றியமைக்க முடியும்.
  • சட்டமியற்றும் நடைமுறை: நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் பொதுவாகப் பின்வரும் வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன:
  • தலைமை நீதிபதியின் முன்முயற்சி: வழக்கமாக, தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு அல்லது கூடுதல் அரசியலமைப்பு அமர்வுகள் தேவைப்படுதல் போன்ற காரணங்களைக் குறிப்பிட்டு, இந்தியத் தலைமை நீதிபதி (CJI) மத்திய சட்ட மற்றும் நீதி அமைச்சகத்திற்கு ஒரு முன்மொழிவை அனுப்புகிறார்.
  • அமைச்சரவை ஒப்புதல்: சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகத்துடன் (நிதிசார் தாக்கங்கள் குறித்து) கலந்தாலோசித்த பிறகு, மசோதாவின் வரைவை மத்திய அமைச்சரவையின் முன் சமர்ப்பிக்கிறது.
  • திருத்த மசோதாவை அறிமுகப்படுத்துதல்: அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும், அரசு ‘உச்ச நீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த மசோதா’-வை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துகிறது.
  • நாடாளுமன்ற ஒப்புதல்: இம்மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
  • குடியரசுத் தலைவரின் ஒப்புதல்: இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பிறகு, மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகஅனுப்பப்படுகிறது; ஒப்புதல் கிடைத்ததும், மசோதா சட்டமாகிறது மற்றும் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக உயர்த்தப்படுகிறது.
  • செயல்படுத்தல்: அதன்பிறகு, புதிய அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை வரையில் கூடுதல் நீதிபதிகளைக் குடியரசுத் தலைவர் (கொலீஜியம் அமைப்பின் பரிந்துரையின் பேரில்) நியமிக்கலாம். பரிணாம வளர்ச்சிப் போக்கு: இந்தியாவின் வளர்ந்து வரும் சட்டத் தேவைகளுக்கு ஏற்ப, ஆரம்பத்தில் 1+7 நீதிபதிகள் என்ற அளவில் அமைந்திருந்த நீதிமன்றத்தின் கட்டமைப்பு படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது (எ.கா., 1956-ல் 10, 1960-ல் 13, 1977-ல் 17 மற்றும் 1986-ல் 25 என).

 

Next தேசிய செய்திகள் >

People also Read