பொருளாதாரம்

தமிழக வேளாண் பட்ஜெட் 2023-2024

வேளாண்மை பட்ஜெட் ஒதுக்கீடு:

  1. 38 ஆயிரத்து 904 கோடியே 46 இலட்சத்து ஆறு ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  2. 2021-22 ஆம் ஆண்டில் 185 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு, தலா ஒரு இலட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு, அவர்கள் மூலமாக ’அக்ரி கிளினிக்’ வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட்டன.
  • கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்
  • சிற்றுாரில் வேளாண்மை முழுமையாக வளர்வதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளையும், வேண்டிய மற்ற பணிகளையும் மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட திட்டமே, இத்திட்டம்.
  • வரும் ஆண்டில் இத்திட்டம் 2,504 கிராம ஊராட்சிகளில் 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
  • தமிழ்நாடு சிறு தானிய இயக்கம்
  • 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அறிவித்திருப்பதை ஒட்டி, தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது.
  • மக்களிடையே சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு “சிறுதானிய திருவிழாக்களும்“ இவ்வியக்கத்தின் மூலம் நடத்தப்படும்.
  • வரும் ஆண்டில், ஒன்றிய, மாநில அரசு நிதி உதவியுடன் 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
  • மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம்
  • வரும் ஆண்டில், 64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செயல்படுத்தப்படும்.
  •  அங்கக வேளாண்மை (organic Farming ) ஊக்குவிப்பு
  • அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வண்ணம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை அண்மையில் வெளியிடப்பட்டது.
  • விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் பயன்பெறும் வகையில், காலதாமதம் இன்றி இப்பணியினை சிறப்பாக மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கப்படும்.
  • சிறந்த அங்கக விவசாயிக்கான “நம்மாழ்வார் விருது“
  •  அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதனை ஊக்குவித்து பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் “நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும்“.  இவ்விருது ஐந்து இலட்சம் ரூபாய் பணப்பரிசு, பாராட்டுப் பத்திரத்துடன் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.

GRAINS –ஒரு தளம் – பல பயன்கள்

  • அனைத்து விவசாயிகளின் அடிப்படை தகவல்களை வங்கிக் கணக்கு, ஆதார் எண், நில விவரங்கள், பயிர் சாகுபடி விவரங்களை கிராம வாரியாக சேகரித்து, கணினிமயமாக்கி புதிய இணையதளமான ‘GRAINS’ (Grower Online Registration of Agriculture Inputs System) அறிமுகப்படுத்தப்படும். இதனால் விவசாயிகளுக்கு ஒரே தளத்தில் எல்லா பயன்களும்(One Stop Solution) கிடைக்கும்.

பயறு பெருக்குத் திட்டம்

  1. தமிழ்நாட்டில் பயறு வகைகளின் பரப்பளவையும், உற்பத்தியையும் அதிகரித்திட பயறு பெருக்குத் திட்டம் நிதியாண்டில் 30 கோடி ரூபாயில் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

எண்ணெய் வித்துக்கான சிறப்புத் திட்டம்

  1. தமிழ்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை உயர்த்திடும் நோக்கத்துடன், சூரியகாந்தி பயிரின் உற்பத்தித் திறனை உயர்த்தவும், அதிக இலாபம் தரக்கூடிய நிலக்கடலை, எள்,  சோயா மொச்சை போன்ற பயிர்களைப் பரவலாக்கம் செய்திடவும் வரும் நிதியாண்டில் 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

  1. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு, பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தினை மிகுந்த நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
  2. ஆண்டில், காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்களிப்பாக 2,337 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

தொகுப்பு முறையில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி

  • மதுரை மல்லிகைக்கு ஓர் இயக்கம்
  • பலா இயக்கம்
  • மிளகாய் மண்டலம்
  • கறிவேப்பிலைத் தொகுப்பு
  • முருங்கை இயக்கம்
  1. வரும் ஆண்டு 1,000 எக்டர் பரப்பில் முருங்கை சாகுபடி ஊக்குவிக்கப்படுவதோடு, பதப்படுத்துதலுக்கும் மதிப்புக்கூட்டுதலுக்கும் உரிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  • நுண்ணீர்ப் பாசனம் அமைத்தல்
  1. வரும் ஆண்டில் இத்திட்டத்திற்கான மொத்த நிதியான 744 கோடி ரூபாய் நிதியில், சுமார் 60 சதவிகித நிதியான 450 கோடி ரூபாயில் இக்குறு வட்டங்களில், 53,400 எக்டர் பரப்பில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
  • உழவர்களுக்கு அயல்நாட்டில் பயிற்சி
  1. 150 முன்னோடி விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.  இத்திட்டத்திற்கென ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தேனி மாவட்டத்தில் வாழை தொகுப்பு வளர்ச்சித் திட்டம்:

  1. வாழையின் உற்பத்தித்திறனில் தமிழ்நாட்டில் முதலிடம் வகிக்கும் தேனி மாவட்டத்தில், வாழைக்கென தனி அடையாளம் உருவாக்கி உலக சந்தைக்கு கொண்டு சேர்க்கும் விதத்தில், வாழைக்கென்று ஒரு தனி தொகுப்புத் திட்டம் 130 கோடி ரூபாய் நிதி மதிப்பீட்டில் அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.

பள்ளி மாணவர்களுக்குப் பண்ணைச் சுற்றுலா

  1. வயல்களை, தோப்புகளை, தோட்டங்களை, பாசனக் கிணறுகளை, பழ மரங்களை, மாணவர்கள் நேரடியாக காண வேண்டுமென்பதற்காகவும், வேளாண்மையின் மகத்துவத்தை அவர்கள் அறிந்து, உணர்ந்து, தெளிந்து, தேற வேண்டுமென்பதற்காகவும், பண்ணைச் சுற்றுலா கல்வித் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
  2. மாணவ சமுதாயத்திற்கு இந்தச் சுற்றுலா விழிப்புணர்வை ஏற்படுத்தும்.  இத்திட்டம் ஒரு கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

பனை மேம்பாட்டு இயக்கம்

  1. பனை சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு ஆற்றங்கரைகள் போன்ற பொது இடங்களில் நடவு செய்ய 10 இலட்சம் பனை விதைகள் வழங்கப்படும்.

பனை ஆராய்ச்சி நிலையம் அமைத்தல்

  1. துாத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லுாரியில் பனைக்கென தனி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்.  இதற்கென 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

வேளாண் இயந்திரமயமாக்குதல்

  1. வேளாண் இயந்திரங்கள், மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள், கரும்பு சாகுபடிக்கு ஏற்ற இயந்திரங்கள், கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ஆகிய இனங்களுக்காக ஒன்றிய , மாநில அரசின் நிதியிலிருந்து 125 கோடி  ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.  தேர்வும் கணினிமயமாக்கப்படும்.

ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

  • டிராக்டர், அறுவடை இயந்திரங்கள் ஆகியவற்றை இயக்குவதற்கும், கையாள்வதற்கும் 500 ஊரக இளைஞர்களுக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் இயந்திரங்களை இயக்குவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.

இ-வாடகை செயலியில் தனியார் இயந்திரங்கள், பழுதுநீக்குபவர்கள் விபரங்கள் இடம்பெறுதல்

  • விவசாயிகள் உழவுப் பணியினைத் தங்குதடையின்றி மேற்கொள்ள உதவிடும்பொருட்டு, தனியாருக்குச் சொந்தமாக டிராக்டர்களின் உரிமையாளர்கள், வேளாண் இயந்திரங்கள், பம்புசெட்டுகளின் பழுதுகளை சரிசெய்யக்கூடிய தனியார் பழுதுநீக்குபவர்களின் பெயர், விலாசம், கைப்பேசி எண் போன்ற விவரங்கள் வட்டார, மாவட்ட வாரியாக, இ-வாடகை செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உழவன் செயலியோடும் இணைக்கப்படும்.

ஒவ்வொரு கிராமத்திற்கு இரு “பவர்“ டில்லர்கள்“

  1. சிறிய வகை வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் அவசியம் கருதி, தமிழ்நாடு அரசின் தொலைநோக்குத் திட்டமாக “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டக் “  கிராமங்களில், ஒரு கிராமத்திற்கு இரண்டு பவர்டில்லர் இயந்திரங்கள் என்ற அடிப்படையில்  வரும் நிதியாண்டில், 2,504 கிராமங்களுக்கு 43 கோடி ரூபாய் மானியத்தில் 5,000 பவர்டில்லர்கள் வழங்கப்படும்.

புவிசார் குறியீடு பெறுதல்

  1. கடந்த ஆண்டில், சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  2. இதேபோன்று, வரும் ஆண்டிலும், கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, தஞ்சாவூர் பேராவூரணி தென்னை, மூலனுார் குட்டை முருங்கை, சாத்துார் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சுடிவல்லம், துாத்துக்குடி விளாத்திகுளம் மிளகாய், கடலுார் கோட்டிமுளை கத்திரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்புகவுணி அரிசி ஆகிய பத்து பொருட்களுக்கு புவிசார் குறியீடு 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

உழவர் சந்தைகளைப் புதுப்பித்தல்

  1. உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள்,  பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, சராசரியாக நாளொன்றுக்கு 8,000 விவசாயிகள், மூன்று இலட்சம் நுகர்வோர் பயனடைந்து வருகின்றனர்.
  2. 25 உழவர் சந்தைகளுக்கு அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறைகள் வசதி, கடைகள் புனரமைப்பு, நடைபாதை வசதிகள் போன்ற பணிகள் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.  மேலும், 50 உழவர் சந்தைகளுக்கு 25 இலட்சம் ரூபாய் ஒதுக்கி, உணவு பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையத்தின் சான்று (FSSAI Certificate) பெற வரும் ஆண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொன்மை சார் உணவகங்கள்

  1. தொன்மை மிக்க ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியக் கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகள் போன்ற உணவுகளை வழங்கவும், வருகிற நுகர்வோர்கள் அவற்றை அருந்தி, விழிப்புணர்வு பெறவும், முதல் கட்டமாக 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும்.

மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) – விரிவுபடுத்துதல்

  1. 30 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணைக்கப்படும்.

பூச்சிகள் அருங்காட்சியகத்தை மேம்படுத்துதல்

  1. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கோயம்புத்துார், வளாகத்தில் பல்வேறு விதமான பூச்சிகள் சேகரிக்கப்பட்டு, அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

வேளாண்மையில் நானோ தொழில்நுட்பம்

  1.  உரம், நுண்ணுாட்டம், பூச்சிக்கொல்லி, விளைபொருளின் தரமறிதல், சேமிப்பு காலத்தை அதிகரித்தல் ஆகியவற்றில் நானோ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.  நானோ யூரியா ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, ட்ரோன் தொழில்நுட்பத்துடன் சேர்த்துப் பரவலாக்கப்பட்டு வருகிறது.
  2. நானோ தொழில்நுட்பம் குறித்து விவசாயிகள் அறியும் வண்ணம் வேளாண் அறிவியல் நிலையம்(KVK), அட்மா திட்டம்(ATMA)   ஆளில்லா வானுார்திக் கழகம்(Unmanned Arial Vehicle Corporation) மூலம் செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்படும்.

கூட்டுறவு பயிர்க் கடன்

  • வரும் ஆண்டில் 14,000 கோடி ரூபாய் அளவிற்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம்

  • அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ’மதி-பூமாலை’ வளாகத்திலும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக, சிறுதானிய சிற்றுண்டி உணவகம்(millet cafe) உருவாக்கப்படும்.

வனவிலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதம் குறித்து ஆராய்ந்து தீர்வு காண தனிக்குழு

  1. வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பது, சட்டவிதிகளுக்கு உட்பட்டு, வனத்துளை மூலம் அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் ஆராய்வதற்கு கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் (வனவிலங்குகள்) தலைமையில் தனிக்குழு ஒன்று அமைக்கப்படும்.
  2. தமிழ்நாடு அரசு, பசுமைத்தமிழக இயக்கத்தின் கீழ், வேளாண் காடு வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் மதிப்புமிக்க மரக்கன்றுகளான சந்தனம், செம்மரம், தேக்கு, ஈட்டி, போன்றவைகைளை இலவசமாக வழங்கி வருகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள்

  1. காவிரி டெல்டா மாவட்டங்களில், உழவர்களுக்கு அதிக வருமானம் ஈட்டவும், இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், வேளாண் தொழில் பெருந்தடத்தினை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
  2. காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் தொழில்நுட்ப புத்தொழில்களை வளர்ப்பதற்காக தஞ்சாவூரில் புதிய வட்டார புத்தொழில் மையம் ஒன்று தமிழ்நாடு புத்தொழில் – புத்தாக்க இயக்கம் மூலம் உருவாக்கப்படும்.
  3. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் தொழில் பெருந்தட திட்டம் செயல்படுத்தப்படும்
Next பொருளாதாரம் >