பொருளாதாரம்

தமிழ்நாடு பட்ஜெட்  2023-2024

தமிழ் வளர்ச்சி, பண்பாடு

    1. தாய்த்தமிழைக் காக்க, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளான திருவாளர்கள் தாளமுத்து, நடராசன் ஆகியோரின் பங்களிப்பைப் போற்றும் வகையில், சென்னையில் நினைவிடம் ஒன்று அமைக்கப்படும்.
    2. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தையும், முற்போக்கு சமத்துவ இந்தியாவின் சிற்பியுமான அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக, அவரது படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.  இதற்காக அரசால் ஐந்து கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
    3. தொழில்நுட்பத் துறையில், தமிழ் மொழியின் பயன்பாட்டினை அதிகரிப்பதன் மூலம் தமிழ் மொழி உலக மொழியாக வளர்வதற்கு புகழ்பெற்ற வல்லுநர்களைக் கொண்டு ’தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு’ நடத்தப்படும். தமிழ்மொழியில் பெருமளவில் மென்பொருட்கள் உருவாக்கப்படுவதை இது ஊக்குவிக்கும்.
  • கடல் தாண்டி கொடி நாட்டிய தமிழர் பெருமை கூறும் பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் வகையில், தமிழர் பண்பாட்டுத் தலங்களை இணைக்க தமிழ்ப் பண்பாட்டுக் கடல்வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும்.
    1. நமது தாய்மொழிக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பினை கருத்திற்கொண்டு அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டையை அரசு வழங்கி வருகிறது.  வரும் ஆண்டில், மேலும், 591 அகவை  முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு இச்சலுகையை அரசு வழங்கும்.
  • சங்கமம், கலை விழா, வரும் ஆண்டில் மேலும் எட்டு முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.  நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களின் பகிர்வினைக் கொண்டாடுவதற்கும் நல்வாய்ப்புகளை இவ்விழாக்கள் ஏற்படுத்தும்.  இதற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 11 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது.
  • நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும், இப்பண்பாடு தொடர்ந்து வருங்காலங்களிலும் செழித்தோங்கவும், மாநிலம் முழுவதும் 25 பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
  • உலகாண்ட சோழர்களின் பங்களிப்பைப் போற்றவும், அக்கால கலைப்பொருட்கள், நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்கவும், தஞ்சாவூரில் “மாபெரும் சோழர் அருங்காட்சியகம்“ ஒன்று அமைக்கப்படும்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு

  1. கட்டுமானம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்க ஒரு சிறப்பு முயற்சியைத் தொடங்க உள்ளது.  இதன்படி, முதற்கட்டமாக 711 தொழிற்சாலைகளிலுள்ள 8.35 இலட்சம் தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவுபடுத்தப்படும்.  உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.  இத்திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களும் பயனடைவார்கள்.
  2. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், குடும்பம் ஒன்றிற்கு ஆண்டுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 11.82 இலட்சம் நோயாளிகளுக்கு 993 கோடி ரூபாய் மதிப்பிலான உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
  3. கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் 1,000 படுக்கைவசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறந்து வைக்கப்படும்.

பள்ளிக் கல்வி

  1. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய கட்டடங்கள் கட்டிடவும் 7,000 கோடி ரூபாய் செலவில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.
  2. வரும் நிதியாண்டில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் என மொத்தம் 1,500 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  3. ’எண்ணும் எழுத்தும் திட்டமானது’  2025 ஆம் ஆண்டுக்குள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அடிப்படை கல்வியறிவும் எண்கணிதத் திறனும் அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  4. இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் வரும்  நிதியாண்டில் 110     

கோடி ரூபாய் செலவில் நான்காம் ஐந்தாம் வகுப்புகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

  1. சர்வதேச புத்தகக் கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.
  2. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இந்து சமய மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும்.
  3. சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் எட்டு தளங்களுடன் நவீன வசதிகளைக் கொண்ட மாபெரும் நுாலகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.‘கலைஞர் நுாற்றாண்டு நுாலகம்“ என்ற பெயரைத் தாங்கி, வரும் ஜீன் மாதம் முதல் வாசகர்களை வரவேற்கும்.  வரவு-செலவுத் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைக்காக 40,299 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வியும் திறன்மேம்பாடும்

  • 54 அரசு பல்தொழில்நுட்பக் கல்லுாரிகள் 2,783 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ’திறன்மிகு மையங்களாக’ தரம் உயர்த்தப்படும்.
  • தொழிற்பயிற்சி நிறுவனங்களிலும் பல்தொழில்நுட்பக் கல்லுாரிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த திறன் பயிற்சியை வழங்குதல், திறமையான பணியாளர்களை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுடன், 120 கோடி ரூபாய் செலவில் சென்னை அம்பத்துாரில் ’தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம்’ (TN-WISH)  அமைக்கப்படும்.
  • இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளிலேயே பயிற்சி அளித்திட தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.  தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் (Factory Skill Schools) என்ற இத்திட்டத்திற்கு இந்த ஆண்டில், 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
  • பெருந்தலைவர் காமராஜர் கல்லுாரி மேம்பாட்டுத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
  • கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் புதிய வகுப்பறைகள்.  கூடுதல் ஆய்வகங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் வரும் நிதியாண்டிலும் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • குடிமைப் பணிகள் தேர்வு மாணவர்களுக்கு மேம்பட்டப் பயிற்சி மற்றும் பயிற்சிப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லுாரியுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தும் ஒவ்வோராண்டும் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் முதல்நிலை தேர்விற்குத் தயாராகுவதற்காக மாதத்திற்கு 7,500
    ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.  முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு

  • சென்னையில் ஓர் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரத்தை இந்த அரசு அமைக்கும்.
  • 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன விளையாட்டு வசதிகளுடன் சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை விரிவாக சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஆதிதிராவிடர். பழங்குடியினர் நலன்

  • மதுரை, கோயம்புத்துார், திருச்சிராப்பள்ளி, நீலகிரியில் அம்மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான்கு புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் 100 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத் த்ட்டம் செவ்வனே செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய ஒரு சிறப்புச் சட்டத்தை இந்த அரசு இயற்றும்.
  • ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வண்ணம், வரும் நிதியாண்டிலிருந்து ’அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’  என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.  இத்திட்டத்தின் மூலம் இயந்திரங்களையும், கருவிகளையும் கொள்முதல் செய்வதற்காக 35 சதவீதம் மூலதன மானியமும் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.  2023-2024 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • நகர்ப்புறப் பகுதிகளிலும் ஊரகப்பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, முழுமையான சமூக-பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த ’அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலன்

  • உலக வங்கி நிதியுதவியடன் 1,763 கோடி ரூபாய் மதிப்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைத் திட்டம் (RIGHTS Project) செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய தடையற்ற கட்டமைப்புகளை அமைத்து, தொழில் பயிற்சி மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அனைவரையம் உள்ளடக்கிய சமுதாயம் ஒன்றை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  இத்திட்டம், 2023-2024 ஆம் ஆண்டில் 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

பெண்கள் அதிகாரமளித்தல்

  • மகளிர் உரிமைத்தொகை திட்டம்
  • குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்கப்படும்   தமிழகத்தில் உள்ள சுமார் 1 கோடி பெண்கள், மகளிர் உரிமைத்தொகை  திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
  • செப்டம்பர் 15 முதல் இத்திட்டத்தை  தமிழக அரசு தொடங்கவுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
  1. பெண்களுக்கான பிரத்யேகமாக சிறப்பு புத்தொழில் இயக்கம்.
  • காலநிலை தொழில்நுட்பம், கிராமப்புற தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம் மற்றும் கடல்சார் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற முன்மொழியும் தொழில் முனைவோர்களை ஆதரிப்பதற்காக,  சிறப்பு மையத்தை அமைப்பதற்கு  ஸ்டார்ட்அப் TN, பல்வேறு ஆதாரங்களில் இருந்து நிதி திரட்டி அவர்களுக்கு உதவும்.
  1. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.30,000 கோடி வங்கிக் கடன்.

உள்கட்டமைப்பு மேம்பாடு

  1. மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி மற்றும் தனியாரின்  பங்களிப்புடன் ரூ.880 கோடி செலவில் சேலத்தில் புதிய ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும்
  2. கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்த ரூ.9000 கோடி மற்றும் ரூ.8,500 கோடி ஒதுக்கீடு
  3. 1,000 புதிய பேருந்துகள் வாங்கவும், மேலும் 500 பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கீடு.
  4. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் கல்லூரி மற்றும் விடுதியுடன் புதிய பல்நோக்கு  சிறப்பு வசதிகள்
  5. அம்பத்தூரில் உலகளாவிய புதுமை முயற்சி மற்றும் திறன் மையம் அமைக்கப்படும்.
  6. 1000 கோடி ரூபாயில் வடசென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.
  7. சிங்கார சென்னை திட்டத்தின் நோக்கத்தை நனவாக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளுடன் 44 கி.மீ நீளத்துக்கு அடையாறு ஆற்றின் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். 1,500 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் பொதுத் தனியார் கூட்டாண்மை மூலம் (பிபிபி) செயல்படுத்தப்படும்

இதர செய்திகள்

  1. ரூ.2,000 கோடியில் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்.
  2. ஈரோடு மாவட்டத்தில் பெரியார் பெயரில் வனவிலங்கு சரணாலயம்.   
  3. மரக்காணத்தில் பன்னாட்டுப் பறவைகள் மையம்.
  4. 10,000 சிறிய நீர்நிலைகள்-குளங்கள் ரூ.800 கோடியில் புதுப்பிப்பு.
  5. ரூ.7145 கோடியில் ஒகேனக்கலில் 2- வது கூட்டுக் குடிநீர் திட்டப் பணி.
  6. ரூ.1,500 கோடியில் அடையாறு ஆறு மறுசீரமைப்புப் பணி.
  7. சென்னை தீவுத் திடலில் திறந்தவெளி திரையரங்கம் உட்பட புதுமை வசதிகள்
  8. ரூ.320 கோடியில் சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகள்
Next பொருளாதாரம் >