நியமனங்கள்

பிரசார் பாரதியில் புதிய தலைமை

சூழல்: தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இந்தியாவின் பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் தலைவராக பிரபல பாடலாசிரியர், எழுத்தாளர் மற்றும் தகவல் தொடர்பு நிபுணர் பிரசூன் ஜோஷியை நியமித்துள்ளது.

பிரசார் பாரதி பற்றி

  • பிரசார் பாரதி என்பது நாட்டின் பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமாகும்.
  • இது 1997 ஆம் ஆண்டில் பிரசார் பாரதி சட்டத்தின் கீழ் ஒரு தன்னாட்சி பெற்ற சட்டப்பூர்வ அமைப்பாக நிறுவப்பட்டது.
  • பொதுமக்களுக்கு கல்வி, தகவல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை வழங்கும் ஒளிபரப்பு சேவைகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
  • இந்த நிறுவனத்தில் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி ஆகிய இரண்டும் அடங்கும். இவை முன்பு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் இயக்கப்பட்டு வந்தன.
  • பிரசார் பாரதியின் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது.

 

நடப்பு தகவல்கள்

  • அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) டெல்லி, நோயாளியின் படுக்கையிலேயே பயன்படுத்தக்கூடிய நாட்டின் முதல் கையடக்க (போர்ட்டபிள்) MRI முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • தேர்தல் நடத்தை விதிகள் 
  • தேர்தல் நடத்தை விதிகள் (MCC) என்பது தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் நடத்தையை ஒழுங்குபடுத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் கட்டமைப்பாகும்.
  • பிரச்சாரம், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை ஆகியவை நியாயமான, சுமூகமான மற்றும் வெளிப்படையான முறையில் நடைபெறுவதை உறுதி செய்தல்.
  • ஆளுங்கட்சி தனது தேர்தல் ஆதாயத்திற்காக அரசு வளங்கள் மற்றும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல்.
  • தேர்தல் முறைகேடுகள், குற்றங்கள் மற்றும் ஊழல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல், மற்றும் தேர்தல்கள் நேர்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்தல்.
  • தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை வழிநடத்தும் தேர்தல் நடத்தை விதிகள் (MCC) முதன்முதலில் 1960-ல் கேரள அரசால் உருவாக்கப்பட்டது.
  • தேர்தல் ஆணையம் (EC) இதை 1968-ல் முறைப்படுத்தியது, 1974-ல் திருத்தியது மற்றும் 1979-ல் “ஆளுங்கட்சி” (Party in Power) பற்றிய ஏழாவது பகுதியை (Part VII) சேர்த்தது.
  • முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் 1991 முதல் இதை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கண்டிப்புடன் அமல்படுத்தினார்.
  • திருக்குறள் 

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து.

  • பொருள்: உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணி போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர். அவர்களுடைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது.(எண் 667) அதிகாரம்: வினைத்திட்பம்
  • தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் வழிமுறைகள் 
  • தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில், ஆட்சி அமைக்கக் குறைந்தபட்சம் 118 இடங்கள் தேவை.
  • எந்தவொரு கட்சிக்கும் 118 இடங்கள் கிடைக்காத நிலை, ‘தொங்கு சட்டமன்றம்’ என்று அழைக்கப்படுகிறது.
  • இந்த நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 163 மற்றும் 164-வது பி சரத்துகளின்படி, ஆளுநர் பின்வரும் 4 வழிகளில் ஒரு கட்சியை ஆட்சியமைக்க அழைக்கலாம்:
    • தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து வெற்றி பெற்றவர்கள்.
    • தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சி.
    • தேர்தலுக்குப் பிறகு கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து அமைக்கும் கூட்டணி.
    • பிற கட்சிகளின் வெளி ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் கட்சி.
  • ஆட்சியமைக்கும் நடைமுறைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் சட்டமன்றத் தலைவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவார்.
    • உச்ச நீதிமன்றத்தின் 1994 எஸ்.ஆர். பொம்மை  வழக்கின் தீர்ப்பின்படி, முதலமைச்சர் அரசியலமைப்புச் சட்டம் 174-ன் கீழ் சட்டமன்றத்தைக் கூட்டி 118 உறுப்பினர்களின் ஆதரவை நிரூபிக்க வேண்டும்.
    • பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டால், அந்த ஆட்சி தடையின்றித் தொடரும்.
    • பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், ஆளுநர் அடுத்த பெரிய கட்சிக்கு வாய்ப்பளிப்பார்.
    • இரண்டாவது கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், சரத்து  356-ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, புதிய தேர்தல்கள் நடத்தப்படும்.

 

Next நியமனம் >