தினசரி தேசிய நிகழ்வு

“5 ஆண்டுகளில் 2 லட்சம் சிறுமிகள் மாயம்“

  • ‘நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2.75 லட்சம் குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 2.12 லட்சம் பேர் சிறுமிகள்’ என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நாட்டில் 2018-2022-ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் 2,75,125 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 2,12,825 பேர் சிறுமிகள்.
  • இதே காலகட்டத்தில், ஏற்கெனவே காணாமல் போனவர்கள் உள்பட 2,40,502 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 1,73,786 பேர் சிறுமிகள்.
  • மேலும், இவ்வாறு காணாமல் போகும் குழந்தைகள் குறித்து புகார் தெரிவித்து கண்டறிய வசதியாக ‘டிராக் சைல்டு வலைதளம்’ என்ற பிரத்யேக வலைதளம் ஒன்று அமைச்சகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆட்கடத்தலுக்கு எதிரான குற்றங்களை நிர்வகிக்கும் சட்டம்:

  • முறையற்ற ஆட்கடத்தல் (தடுப்பு) சட்டம் 1956

மாரடைப்பு அதிகரிப்பு

  • மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ‘கரோனாவுக்குப் பிறகு மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது தொடர்பான 3 வெவ்வேறு ஆய்வுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக, 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டோருக்கு திடீர் மாரடைப்பு ஏற்படுவது தொடர்பாக சுமார் 40 மருத்துவமனைகளில் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
  • அதே வேளையில், கரோனா தடுப்பூசிக்கும் திடீர் மாரடைப்புக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து சுமார் 30 மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதயம் சார்ந்த நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக தேசிய தொற்றாநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு நிதியுதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. 
  • இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எய்ம்ஸ் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் கீழ் 60 கோடிக்கும் அதிகமானோர் பலனடைந்துள்ளனர்.
  • இதயம் சார்ந்த நோய்களுக்கான பொதுப் பெயர் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா 

  • மாநிலங்களவையில் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா 2023-ஐ மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தாக்கல் செய்தார்.
  • அந்த மசோதாவில், திரைப்படங்களை கள்ளத்தனமாகப் பதிவு செய்வதற்கு தடை விதிக்கும் 6ஏஏ பிரிவு, அவ்வாறு படம்பிடிக்கப்பட்ட திரைப்படத்தின் திருட்டுப் பிரதியை வெளியிடத் தடை விதிக்கும் (6ஏபி) ஆகிய புதிய பிரிவுகளை ஒளிப்பதிவு சட்டத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்தச் சட்டப் பிரிவுகளை மீறி, திரைப்படங்களின் திருட்டுப் பிரதிகளை தயாரிப்போருக்கு குறைந்தபட்சம் 3 மாதங்கள் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சமாக திரைப்படத்தின் தயாரிப்புச் செலவில் 5 சதவீதம் வரை அபராதம் விதிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • இதுமட்டுமின்றி திரைப்படங்களுக்கு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கும் போது, அதை வயதுவாரியாக, அதாவது ‘யுஏ7+’, ‘யுஏ13+’ மற்றும் யுஏ16+’ என 3 பிரிவுகளாக வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Next தினசரி தேசிய நிகழ்வு >