தமிழ்நாடு

தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை வெளியீடு

இணையதளம் மூலம் நஞ்சில்லா பொருள்கள் விநியோகிக்க இலக்கு

  • இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேளாண்மைத் துறையில் தனியாக ஒரு பிரிவு உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
  • அதன்படி, முதல் முறையாக வெளியிடப்பட்ட வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், அங்கக வேளாண்மைக்கான தனிக் கொள்கை குறித்த அறிவிப்பு செய்யப்பட்டது. அங்கக வேளாண் கொள்கையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
  • தேசிய அளவில் அங்கக வேளாண்மையில் தமிழ்நாடு 14-ஆவது இடத்தில் உள்ளது.  2020-21-ஆம் ஆண்டில் 4 ஆயிரத்து 223 மெட்ரிக் டன் அங்ககப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு ரூ.108 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

கொள்கையின் நோக்கங்கள்: 

  • அங்கக  வேளாண்மைக் கொள்கை சில முக்கிய அம்சங்களை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.  மண்வளம், வேளாண் சூழலியல், பல்லுயிர்ப் பெருக்கம் ஆகியவற்றை பாதுகாத்து, நிலைத்திருக்கச் செய்வது, பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவை வழங்குதல் ஆகியன நோக்கங்களாகும்.
  • சந்தை, சான்றிதழ் ஆலோசனைகளை வழங்குதல், ஏற்றுமதியை ஊக்குவித்தல், விவசாயிகளின் வருவாய் அதிகரித்தல் போன்றவையும் முக்கிய கொள்கைகளாகும்.
  • அங்கக வேளாண்மைக்கு பயிர்க் கடன் வழங்குவது அரசால் ஊக்குவிக்கப்படும்.  இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பயிர் இழப்பு, சேதங்களுக்கு பயிர்க் காப்பீடு மூலம் உதவி அளிக்கப்படும்.  உயிர் உரங்கள், உயிர் பூச்சிக் கொல்லிகள், உயிரியல் கட்டுப்பாட்டுக்குக் காரணிகள் ஆகியவற்றின் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டு அதற்கான உதவிகள் அளிக்கப்படும். அங்கக வேளாண்மையில் சான்றிதழ் வழங்கும் நடைமுறை முக்கியமான அம்சமாகும். சான்றிதழ் நடைமுறையை எளிதாக்க ஒற்றைச் சாளர முறை செயல்படுத்தப்படும்.  விவசாயிகளின் பதிவு, சான்றளிப்பு, விரிவான தரவுதளத்தைப் பராமரித்தல் ஆகிய பணிகள் இணையதளம் மூலமாகவே மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும்.

கால்நடை கோழி வளர்ப்பு:

  • அங்கக வேளாண் சான்றளிப்பின் ஒருபகுதியாக கால்நடை, கோழி, தேனீ, மீன், காளான் வளர்ப்புகள், பசுமைக்குடில் சாகுபடி ஆகியவற்றின் உற்பத்திப் பொருள்களுக்கும் அங்கக சான்றளிப்புத் துறையின் சான்றிதழ் அளிக்கப்படும்.
  • தமிழ்நாட்டில் வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அங்கக காய்கறித் தோட்டங்கள், பழத் தோட்டங்களை அமைப்பதற்கான முறை உருவாக்கப்படும்.

உணவுத் திருவிழாக்கள்:

  • ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அங்கக உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படும்.

மின் வணிகம்:

  • வேளாண் அங்கக பொருள்களை விநியோகம் பல்வேறு வழிகளில் செய்யப்படும்.  மின் வணிகம், இணையதளம், தேசிய மின்னணு வேளாண் சந்தை, கைப்பேசி செயலிகள், சந்தைத் தளங்கள் ஆகியவற்றின் வாயிலாக அங்ககத் தயாரிப்புகள் சந்தைப்படுத்தப்படும்.

ஆரோக்கிய உணவு உறுதியாகும்:  முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • மனிதன் மட்டுமல்லாது, கால்நடைகளின் ஆரோக்கியத்துக்கு நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்வதற்கும், இயற்கை முறையில் உற்பத்தியாகும் வேளாண் விளை பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், பல்வேறு உத்திகளை கண்டறிந்து அங்கக வேளாண்மை கொள்கையை தமிழ்நாடு அரசு வகுத்துள்ளது. இது இயற்கை வேளாண் வரலாற்றில் மிக முக்கியமானதாகும்.
  • இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த அனைத்து வகை உதவிகளையும் விவசாயிகளுக்கு அரசு செய்யும், இந்தக் கொள்கை தமிழ்நாட்டு மக்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்குவதை உறுதி செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நமக்கு நாமே திட்டத்தில் மக்கள் விரும்பும் பணிகளைச் செயல்படுத்தலாம்

  • சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் பங்களிப்பில் ’நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் மக்கள் தாங்கள் விரும்பும் திட்டப்பணிகளை மேற்கொள்ளலாம்.
  • நகர்ப்புறப் பகுதிகளின் வளர்ச்சிக்காக நமக்கு நாமே திட்டமானது, அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி, பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • இதற்கு குறிப்பிட்ட அளவு நிதி பங்களிப்பை அளிக்கும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு தமிழ்நாடு முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் வகையில் ரூ.300 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நமக்கு நாமே திட்டம் பற்றி:

  • தொடக்கம்: 1997-1998
  • மறுதொடக்கம் 2021

இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

  1. தகவல் தொழில்நுட்ப மாநாட்டின் ஒருபகுதியாக,  முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இரண்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, தாட்கோ மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் நிறுவனத்துக்கு இடையே திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதனால், 6 ஆயிரம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் அளிக்கப்படும்.

  1. இதேபோன்று, தொழில்நுட்ப வளர்ச்சி மையம் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் நிறுவனத்துக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், வேலைவாய்ப்பு, ஆசிரியர் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

ICT அகாடமி பற்றி:

ICT அகாடமி என்பது மாநில அரசுகள் மற்றும் தொழில்துறைகளுடன் இணைந்து இந்திய அரசின் ஒரு முயற்சியாகும்.

இது ஒரு இலாப நோக்கற்ற சமூகமாகும், இது பொது-தனியார்-கூட்டாண்மை  (பிபிபி) மாதிரியின் கீழ் முதல் முன்னோடி முயற்சியாகும், இது உயர்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முயற்சிக்கிறது.

Next தமிழ்நாடு >