அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றம் பொது நிர்வாகம்

7 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

  • தில்லி நிர்வாக திருத்த மசோதா உள்பட 7 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
  • எண்ம தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா: தனிநபர் தரவுகளை நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பிரிவுகள் உள்ளன. அத்துடன் அந்த நிறுவனங்கள் தரவுகளை தவறாகப் பயன்படுத்தினால் அல்லது தரவுகளைப் பாதுகாக்கத் தவறினால் ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.
  • மேலும், சிறார்களின் தரவுகளை அவர்களின் பாதுகாவலர்கள் ஒப்புதலை பெற்ற பின்னர் கையாள முடியும்.
  • இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, அந்த மசோதா சட்டமாகியுள்ளது. 
  • பிறப்பு & இறப்பு சட்டத்திருத்த மசோதா: கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, ஓட்டுநர் உரிமம் வழங்கல், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஆதார் எண், திருமணப் பதிவு, அரசுப் பணி நியமனம் உள்ளிட்டவற்றுக்கு பிறப்புச் சான்றிதழை மட்டுமே ஆவணமாகப் பயன்படுத்திக்கொள்ள பிறப்பு மற்றும் இறப்பு சட்டத்திருத்த மசோதா அனுமதிக்கிறது.
  • இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த மசோதா சட்டமாகியுள்ளது. 
  • நன்னம்பிக்கை (ஜன் விஸ்வாஸ்) சட்டப் பிரிவுகள் திருத்த மசோதா, இந்திய கல்வி மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா, தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, கடலோரப் பகுதிகள் கனிம (மேம்பாடு மற்றும் ஒழுங்காற்று) திருத்த மசோதா ஆகியவற்றுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அந்த மசோதாக்கள் சட்டமாகியுள்ளன.

மத்திய அரசாங்கம்-பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள்

”ஊட்டச்சத்து உறுதிசெய்” திட்டம்

  • 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கும் வகையில், தமிழக அரசால் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ், 6 வயது வரையுள்ள மிதமான மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய 9.3 லட்சம் குழந்தைகள் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டார்கள்.
  • அதில் 43,200 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை உள்பட வெவ்வேறு மருத்துவ சிகிச்சைகள் மாவட்ட ஆரம்ப சிகிச்சை மையங்களில் அளிக்கப்பட்டது.

மேலும், இத்திட்டத்தின் கீழ் பிறவியிலேயே கண்டறியப்பட்ட இருதய நோய், பிறவியிலேயே கண்டறியப்பட்ட மூளை வளர்ச்சி குறைபாடு, பிறவி பார்வை குறைபாடு, பிறவி காது கேளாமை, பிறவி கால் ஊனம் போன்ற பிறவி குறைபாடுகளை உடைய 3,038 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்பொழுது அவர்கள் நலமாக உள்ளனர் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next அரசியல் அறிவியல் >